ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்

“இந்த சிஸ்டம் எவ்வளவு ஆபத்தானதுன்னு அதை எதிர்க்கற வரை உனக்கு புரியாது” விசாரனை என்ற திரைப்படத்தில் இந்த வசனம் வரும். சிஸ்டம் என்று எதை சொல்கிறார்கள்? நம் அரசாங்கம் இயங்கும் முறையைத்தான். அதை யார் இயக்குவது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும். அவர்கள் எங்கேயிருந்து வருகிறார்கள். நம்மில் இருந்துதான், நம்மால்தான் உருவாகிறார்கள். ஆனால் நமக்காகவா என்றால் இல்லை. சுஜாதா ஒரு சிறுகதையின் முடிவில் இப்படி குறிப்பிட்டுருப்பார்.”ஓழுங்காதானே ஆரம்பிச்சோம், அப்புறம் எப்படி இப்படி?” இளைஞன் ஒருவன் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்று சுட்டுக் கொல்லப்படுகையில் வரும் இந்த வசனம். நம் நாட்டை ஒழுங்காகத்தான் கட்டியமைக்கத் துவங்கினோம். ஆனால் இடையில் ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டது. இப்போது எதுவும் ஒழுங்காக இல்லை. அதை சுட்டிக்காட்ட ஆட்டோ சங்கர் ஒரு உதாரணம்.

ஆட்டோ சங்கர் என்ற பெயர் மிகவும் பிரபலம். ஒருவேளை இப்போதைய இணைய தலைமுறைகளுக்கு அறிமுகமில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கும் சமீபத்தில் இணையத் தொடர் ஒன்று வெளியாகி அறிமுக படுத்தியிருந்தது.

சுவருக்குள் இடிக்க இடிக்க பிணங்கள்

கட்டில் மெத்தைக்குள் கட்டு கட்டாக பணம்

சென்னை மத்திய சிறையிலிருந்து முதல் முறையாக மரண தண்டனை கைதி தப்பியோட்டம்

இதெல்லாம் ஆட்டோ சங்கரை நினைவூட்டும் பத்திரிக்கையில் வந்த தலைப்பு செய்திகள். யார் அந்த ஆட்டோ சங்கர்? அவன் உண்மையான பெயர் கௌரி சங்கர். சென்னை திருவான்மியூரில் எம் எல் ஏ வாக ஜெயித்து, அமைச்சராகி, பெரும் கல்வித் தந்தை ஆகியிருக்க வேண்டியவன். அதுதான் அவன் இலட்சியமாக இருந்தது. ஆனால் நடந்ததோ வேறு.

1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். ஒரு பெண் வயிற்றில் குழந்தையுடன் ஆளுனரிடம் மனு கொடுக்கிறாள். என் கணவனை பல மாதாங்களாக காணவில்லை என்று. அவள் அழுது புலம்பியதை மனதில் கொண்டு ஆளுனர் சிபிசிஐடி வசம் இவ்வழக்கை பார்க்க சொல்லி ஒப்படைக்கிறார். இறுதியாக அவள் கணவன் எங்கே தென்பட்டான் என விசாரிக்க, தன் சகாக்களுடன் திருவான்மியூரில் ஒரு தெருச்சண்டையில் ஈடுபட்டதாகவும் அந்த ஏரியா வஸ்தாது ஆட்டோ சங்கரின் ஆட்கள் அவரையும் அவர் நண்பர்கள் இருவரையும் தூக்கிச் சென்றதாகவும் தகவல் கிடைக்கிறது. ஆட்டோ சங்கரை தொடக்கூட முடியாது. அந்தளவு அவனுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் செல்வாக்கு. அவன் ஆளான பாபுவை தூக்குகிறார்கள். அவன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருக்கவும் இஷ்டத்துக்கு விளையாடலாம். ஆனால் அவன் அவ்வளவு சிரமம் கொடுக்காமல் ஒப்புக் கொள்கிறான்.

“சொல்லிடறேன் அய்யா ஆறு கொலைங்க பத்தியும் சொல்லிடறேன்”

ஒருவன் காணாமல் போனதை விசாரித்தால் என்ன இது புதிதாக ஏதேதோ சொல்கிறான் என்று தோண்ட தோண்ட பணமும் பிணமுமாக வெளிப்படுகிறது. அத்தனைக்கும் காரணமென கைக்காட்டப் படுகிறான், ஆட்டோ சங்கர். கூட்டாளி ஒருவன் உண்மை விளம்பி ஆனால் போதாதா நம் காவல்துறைக்கு? தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டு விசாரிக்கப் படுகிறான் சங்கர். ஆ….ன் ஒரு விசயம், அவனை தொங்க விட்டிருக்கும் மின் விசிறியை அந்த காவல் நிலையத்திற்கு வாங்கிக் கொடுத்தவனே நம் சங்கர்தான். விசிறி மட்டுமல்ல, திருவான்மியூரை சுற்றியுள்ள பல காவல் நிலையங்கள் இயங்க மாதமாதம் செலவு செய்து வந்தவனே அவன் தான். அவனுக்கு ஏது அவ்வளவு பணம்? என்ன தொழில் செய்கிறான்?

சமீபத்தில் வந்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடவே சில எதிர்ப்புகளும். என்ன எதிர்ப்பு என்றால் அனைவரும் சொல்வது போல எம்ஜியாரின் ஆட்சிக் காலம் பொற்காலமாக இருந்தது உண்மைதான். யாருக்கு என்றால் சாராய சக்கரவர்த்திகளுக்கு என்ற வரலாற்றை படத்தில் காட்டியிருப்பார்கள். அந்த காலகட்டத்தில் 1977-88 களில்தான் சங்கரும் சாராய சக்கரவர்த்தி ஆனான். இல்லை ஆக்கப்பட்டான். 18 வயதிலேயே 14 வயது பெண்ணை காதலித்து மணம் செய்து கொண்டவன் சங்கர். விருப்பமில்லாவிட்டாலும் அவன் திருமணத்தை நடத்தி வைத்தவர், அவனது நலம் விரும்பி. பெயர் கிருபானந்த வாரியார்.

வாடகைக்கு குடிசை வீட்டில் தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வரும் சங்கருக்கு போதாத காலம் வருகிறது. தொடர் மழை. வேலை இல்லை. வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி கூட இல்லை. ஏற்கனவே தெரு அண்ணாச்சி கடையில் கடன் பாக்கி இருக்கிறது. மனைவி வயிற்றில் இரண்டாவது குழந்தை வேறு. அவள் பசி மயக்கத்தில் கிடக்க, கெஞ்சி கேட்டாவது அரிசி வாங்கி வந்து கஞ்சி காய்ச்சி குடிக்கலாம் என்று கடைக்கு செல்கிறான். அண்ணாச்சி விரட்டுகிறார். அங்கேயே நிற்கிறான். மாமுல் வாங்க வந்த ஏட்டய்யாவிடம் “அய்யா இவன் மாமுல் கேட்டு தொல்லை பன்றான்யா” என்று சொல்ல, அவர் கையில் வைத்திருந்த இலத்தியால் சேற்றில் போட்டு புரட்டி எடுக்கிறார். அதோடு நின்றுருந்திருந்தால் சங்கர் கௌரி சங்கராகவே இருந்திருப்பான். அடிபட்டு நொந்து தரையில் கிடப்பவனை “எப்படி இருக்கு போலிஸ் அடி?” என்று நக்கலாக அண்ணாச்சி கேட்க, சங்கருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அண்ணாச்சியையும் கடையையும் துவம்சம் செய்கிறான். “இதையும் போலிஸ்கிட்ட சொல்லு” என்று அரிசி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறான். மனைவியிடம் அடிபட்டதை நினைத்து அழுகை. எப்போது வந்து போலிஸ் அள்ளிக் கொண்டு போகுமோ என்று பயம். நாம் போய்விட்டால் மனைவி என்னாவாள் என்ற குழப்பம். விடிய தூங்காமல் இருப்பவன் காலை அண்ணாச்சி கடை பக்கமாக செல்கிறான்.

“அண்ணே நீங்க பெரிய ரவுடின்னு தெரியாம போலிஸ்கிட்ட சொல்லிட்டன். என்னை மன்னிச்சுருங்கண்ணே, இனி வாரம் தவறாம வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பிடறண்ணே” என்று சரணடைகிறார் அண்ணாச்சி. டீ குடிக்க சென்றால் முதலாளியே சப்ளை செய்கிறார். பணம் வாங்கவில்லை. கௌரி சங்கர் ஆட்டோ சங்கராகிறான். ஏரியா அவனுக்கு கீழ் வருகிறது. போலிசும்தான். வெறும் இரவுடித்தனம் செய்தால் போதுமா? நாலு காசு பார்க்க வேண்டாமா? என்று அக்கறையாக எங்கே சரக்கு எடுக்க வேண்டும் எங்கே வைத்து விற்க வேண்டும் என்று கூட இருந்து சாராயக் கடை வைத்து கொடுத்ததோடு, முதல் நாள் வந்து துவக்கி வைத்து, இங்கே குடித்தால் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று அவனை வளர்த்து விட தொடங்கியது காவல் துறை.

சாராயம் கூட பரவாயில்லை. சல்லாபத் துறைக்கு சங்கரை காவல் துறை கொண்டு வந்த முறைதான் சுவாரசியம். நம்ம ஏரியால ஏகப்பட்ட ஆந்திராக்காரனுங்க பிரார்த்தல் பன்றாங்கப்பா, ஒரு தமிழனா உனக்கு நெஞ்சு கொதிக்கலையா? என்று தமிழ் தேசியம் பேசித்தான் சங்கரை வைத்து அவற்றை காலி செய்ய வைத்து அவனை வைத்தே விபச்சாரத்தையும் வெற்றிகரமாக நடத்த தொடங்கியது காவல் துறை.

அதன் பின் தான் அரசியல்வாதிகள் உள்ளே வருகிறார்கள். அதாவது சங்கரின் வாடிக்கையாளர்களாக. அவர்கள் கேட்பதெல்லாம் திரை நட்சத்திரங்களைத்தான். எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு எந்தெந்த நடிகைகளை எங்கெங்கே ஏற்பாடு செய்தேன் என்று தெள்ளத் தெளிவாக பெயரை மட்டும் சொல்லாமல் குறிப்பிட்டுள்ளார்கள். உதாரணத்திற்கு தண்ணீர் தண்ணீர் நாயகி என்றால் போதாதா? வளரும் நிலா அரசியல்வாதி என்றால் புரிந்துக் கொள்ள மாட்டோமா?

மிக மிக முக்கியமான சுவாரசியமான பகுதி என்றால் சிறையீருந்து சங்கர் தப்பிப்பது தான். இந்திய அளவில் பரபரப்பான செய்தியானது. ஒரு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து சிறைப் பாதுகாப்பை வலுவாக்க வேண்டி இருந்தது. சிறையில் இருந்தபடி தெளிவாக திட்டமிட்டதும், தப்பித்ததும், அதன் பின் மீண்டும் காவல்துறையிடம் அகப்படும் வரை அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் வேறு எந்த புத்தகத்திலும் படிக்க கிடைக்காதவை.

சங்கரின் வாழ்க்கை எங்கிருந்தோ ஆரம்பித்து, எப்படியோ உச்சத்தை அடைந்து, ஒரு நாள் விடியற்காலை தூக்குக் கயிற்றில் முடிந்தது. நக்கீரன் இந்த கதையை தொடர்கதையாக வெளியிட்டது. அது அவ்வளவு சுலபமான விசயமாக இருக்கவில்லை. அதற்காக அவர்கள் பட்ட பாடு தனிப்பெரும்கதை. அதன் சுருக்கமே நூலின் முதல் 70 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. உண்மையில் அந்த 70 பக்கங்களையும் வாசிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. அது மட்டுமே குறு நூலாக வந்திருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

நக்கீரன் கோபாலிடம்அடிக்கடி இந்த கேள்வி கேட்கப்படுமாம். ஏன் எப்பவும் யாரும் எழுதாத இந்த மாதிரி விசயங்களையே எழுதறிங்க என்று. எப்போதும் ஒரே பதில்தான் “யாராவது இதையும் பேசனும்ல”. கோபல் இல்லையென்றால் வீரப்பன் விசயம் எப்படி வந்திருக்கும்? நித்யானந்தா விவகாரம்? இதோ சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு? ஒருகாலத்தில் இலஞ்சம் ஊழல்களை பற்றித்தான் அதிகம் எழுதினார்களாம். ஆனால் நம் மக்களுக்கு இலஞ்சமும் ஊழலும் அவ்வளவு பெரிய குற்றமல்ல என்ற மன நிலை வந்து விட்டதாம். உண்மைதானே? இப்போது எந்த இலஞ்ச ஊழல் விசயங்களுக்கு அதிர்ச்சியடைகிறோம்?

புதுப்பேட்டை படத்தில் கொக்கிக் குமார் எம் எல் ஏ சீட்டு கேட்கையில் ஒரு வசனம் வரும். “தமிழ் நாடு முழுக்க உன்னை மாதிரி தொகுதிக்கு 4 பேரை உருவாக்கி விட்டுருக்கோம், எல்லாருக்கும் சீட்டு கொடுக்க முடியுமா?” உண்மையில் இன்னமும் அப்படி பலர் உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியதற்கு ஒரே ஒரு காரணம்தான். காவல்துறையை நம்பி அவனைப் போல இன்னொருவன் உருவாகி விடக் கூடாது.

கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய சுயசரிதை என்று இதற்கு முன்பு திருடன் மணியன் பிள்ளையை பரிந்துரைப்பேன். இப்போது அதனுடன் ஆட்டோசங்கரையும் சொல்லப் போகிறேன்.

1 thought on “ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்”

Leave a Reply to kaliyugathuayyan v Cancel Reply

Your email address will not be published.