சாதி ஒழிப்பு – டாக்டர் அம்பேத்கர்

ஒரு நாள் பகல் வேளையில், நல்ல உணவுக்குப் பின் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாத பொழுது நண்பர் ஒருவரிடம் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பெரிய தேசாபிமானம் கொண்டவனாக என்னை நம்பிக் கொண்டிருந்த நான் “இந்தியாவை பார்த்திங்களா சார்? இவ்வளவு வேற்றுமை இருந்தும் எல்லா மாநிலங்களும் எப்படி ஒருங்கிணைந்து இருக்கு!” என்று ஒரு உரையாடலை துவங்கினேன். பகுத்தறிவும் சுயமரியாதையும் இயல்பிலேயே கொண்டிருந்த அந்த நண்பர் இந்தியாவைக் குறித்த தன் பார்வையை சொல்லத் துவங்கினார். அன்றுதான் எனக்கும் உண்மைகளை பார்க்கும் திறன் வந்தது. இந்தியாவின் பெருமைகள் மட்டும் தொடர்ந்து பேசப்பட்டு, சிறுமைகள் ஏன் இரகசியங்களாக மறைக்கப்படுகின்றன என்பதும் புரிய வந்தது. அன்று பெரியார் என்றொருவர் எனக்கு அறிமுகமானார்.

தமிழ் நாட்டில் பெரியார் தந்தை என்று அழைக்கப்படுவதை போல இந்தியா முழுக்க தந்தை என்று ஒருவர் அழைக்கப்படுகிறார் என்பது தெரிய வர பல வருடங்கள் பிடித்தது எனக்கு. பாபா சாஹேப் அம்பேத்கர். தந்தை அம்பேத்கர் என்று அனைவராலும் மதிக்கப்படும் அத்தலைவரும் சரி, பெரியாரும் சரி, அவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணம் அனைவருக்கும் சிந்திக்க தூண்டுகோலாய் தொடர்ந்து உண்மைகளை உரக்கப் பேசியதே காரணம். என்ன உண்மைகள்? இந்தியாவில் மனிதர்கள் சமமாக இல்லை என்பதே அந்த உண்மை. அதற்கான காரணங்களாக, தீர்வுகளாக இருவரும் ஒரே விசயத்தைத்தான் முன்வைத்தார்கள்.

இந்தியா ஒரு துணைக்கண்டம். புவியியல்கூறுகளால் மட்டுமின்றி வேறுபட்ட இனக்குழுக்களாலும் கலாச்சாரத்தாலும் நிரம்பி வழியும் தேசமிது. அத்தனை மாநிலங்களுக்கும் பொதுவானதொரு அம்சம் என்றால் அது வர்ணபேதம் மட்டும்தான். எங்கு சென்று பார்ப்பினும் உச்சத்தில் பார்ப்பனர் இருப்பர். கீழே சூத்திரரும் பஞ்சமரும் இருப்பர். இப்போது வரையிலும் அதுதான் நிலை. அதெல்லாம் இல்லைங்க என்று யாரேனும் சொன்னால் என்னுடைய முதல் பதில் நானும் அப்படித்தாங்க சொல்லிக்கிட்டு இருந்தேன் என்பதுதான்.

சாதிகளின் தோற்றம் குறித்தும் செயல்படும் முறை குறித்தும் அடி முதல் நுனி வரை ஆராய்ந்து ஆதாரப்பூர்வமாக ஆய்வறிக்கை சமர்ப்பித்தவர் அம்பேத்கர். அவற்றை யாராலும் மறுக்க முடியாததற்கு காரணம் அத்தனையும் உண்மை என்பதுதான். இந்த நூல் அவரது உரையின் எழுத்து வடிவம். முழுக்க இந்துக்களால் நிரம்பிய ஒரு சபையில் தன் கருத்துக்களை தங்கு தடையின்றி மிகத் துணிச்சலாக எடுத்துரைத்திருக்கிறார். அதனை 83 குறும்பிரிவுகளாக பிரித்து நூல் வடிவில் வழங்கியிருக்கிறார்கள்.

முதலில் இந்து மதம் எப்படி இருக்கிறது என்பதில் துவங்குகிறார். அதில் தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப் படுகின்றனர், என்னென்ன வகைகளில் அவர்கள் வதைக்கப்படுகிறார்கள், இப்படி தங்களில் ஒரு கூட்டத்தின் மீது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தம் கூட்டத்திற்கு, ஆங்கிலேயனின் ஆதிக்கத்தை எதிர்க்க அருகதை இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

ஒரு பிரச்சனையை பற்றி பேச வேண்டுமெனில் அதன் காரணங்களையும், அதனால் என்ன தீமை என்பதையும் சொல்வதோடு நிறுத்தக்கூடாது. அது தொடர்ந்தால் என்ன நிகழும்? என்னென்ன செய்யலாம்? இன்னின்ன செய்தால் என்னென்ன தடைகள் வரும். அத்தனையும் கடந்து தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும். அம்பேத்கர் அதைத்தான் இந்த உரையில் சொல்லியிருக்கிறார்.

இந்து மதத்தின் துவக்கம், அது எங்ஙனம் பரப்பக்கூடிய மதமாக இருந்திருக்கக் கூடும், அதிலிருந்து ஆதிக்கத்திற்காக வர்ணபேதத்தை உருவாக்கியது எப்படி என்பதை தெள்ளத் தெளிவாக நாடு முழுக்க இருக்கும் சாதிகளை ஒப்பிட்டு விளக்கமாக கூறுகிறார். உதாரணத்திற்கு தென்னிந்திய பார்ப்பனர்கள் சைவமாக இருக்கையில் வங்காளத்தவர்கள் எப்படி அசைவத்தை ஏற்றார்கள்? அதே சமயம் மேற்கு மாநிலங்களில் வைசியர்கள் எப்படி சைவமாக இருக்கிறார்கள் என்ற விளக்கம் வேறொரு கோணத்தை காட்டியது.

ஆதிக்கம் என்று ஒன்று இருந்தால் அதை எதிர்த்து புரட்சி என்ற ஒன்று நடக்கும். அப்படித்தான் உலகம் முழுக்க நடந்திருக்கிறது. ஐரோப்பாவில் இல்லாத ஆதிக்கமா? ஆனால் அங்கெல்லாம் ஏதாவதொரு கட்டத்தில் எதிர்ப்பு உருவானது, புரட்சி நடந்தது, சீர்திருத்தம் நிகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஏன்?

ஏனென்றால் இங்கு ஆதிக்கம் நேரடியாக நிகழாமல் படிநிலைகளாக நிகழ்த்தப்படுகிறது. ஏதேனும் ஒரு குழு எதிர்த்தால் மற்ற குழுக்கள் அதைக் கட்டுப்படுத்தி விடும். இந்த நால்வர்ண துரோகத்தை அவரது வரிகளிலேயே பார்க்கலாம்.

“பார்ப்பனர்கள் சத்திரியர்களை முகஸ்துதி செய்தார்கள். பார்ப்பனனும் சத்திரியனுமாக சேர்ந்துக் கொண்டு வைசியனைச் சுரண்டி வாழ்வதற்காகவே வைசியனை வாழ விட்டார்கள். ஆனால் இந்த மூன்று வர்ணத்தவருமே சூத்திரனை நசுக்குவதில் ஒத்துப் போனார்கள்”

வெறுமனே எப்படி ஆதிக்கத்தால் ஒருவனை கட்டுப்படுத்தி விட முடியும்? அதை அவனை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை கடவுளின் வாக்கு என்றார்கள். அதற்காக சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அதன்படி பிறப்பால் இன்னார் இந்த வர்ணத்தை சார்ந்தவன் என வகுத்தார்கள்.

பிறப்பால் இந்த பிரிவை சார்ந்தவன், இன்னதைத்தான் செய்ய வேண்டும் என்பதோடு நிற்கவில்லை. அதைத் தவிர்த்து மற்றதை செய்யத் தேவை இல்லை என்பதோடு, செய்யக் கூடாது என்றும், செய்தால் இன்னின்ன தண்டனைகள் என்றும் தெளிவாக வரையறுத்து வைத்திருந்தார்கள். இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இம்மத பெண்கள்தான்.

கால ஓட்டத்தில் அனைத்தும் மாறினாலும், உரிமைகளை கடைசியாகத்தான் பெண்கள் பெற இயலும் என்ற நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் கேட்டிருக்கும் கேள்வி “பெண்களை மதகுருக்களாகவும் படை வீரர்களாகவும் இந்து மதம் அனுமதிக்குமா?” என்பதுதான். தற்சமயம் இராணுவத்தில் உயர்பதவிகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. வழிபாட்டு தலங்களில் பெண்களின் நிலை குறித்து சொல்லவே வேண்டாம்.

தமிழ் நாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் பொதுவாக என்ன நினைப்பார்கள் என்றால் பெரியார் பார்ப்பன விரோதி, அம்பேத்கர் அப்படி தனிப்பட்ட ஒரு கூட்டத்தை கட்டம் கட்டாதவர் என்று. ஏனென்றால் அவர்கள் அதிகள் அம்பேத்கரை வாசித்திருக்க மாட்டார்கள். நான் வாசித்த வரை பார்ப்பனியத்தை கையில் பிடித்திருக்கும் பார்ப்பனர்களை விமர்சிப்பதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை. இந்த நூலையே அதற்கு உதாரணமாக சொல்லலாம். பார்ப்பனர்கள் புரட்சி பேசுவார்கள் என்றோ, வர்ணாசிரமத்தை ஒழிக்க கைக்கோர்ப்பார்கள் என்றோ எதிர்பார்ப்பது மூடத்தனம் என்கிறார்.

சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தீண்டாமையை மட்டும் நீக்கிவிட்டு, வர்ணபேதத்தை தொடர நினைக்கும் மகாத்மாவை கடுமையாக சாடுகிறார். வெறும் சமபந்தி மட்டும் சாதியை ஒழித்து விடாது. சாதி பேதத்தினை ஒழிக்க சிறந்த வழி கலப்பு மணமே என்கிறார். இறுதியாக இந்து மதத்திலுள்ள ஆதிக்கத்தை சரிசெய்ய சில தீர்வுகளாய் முன்வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும். அது அரசுப் பணியாக மாற வேண்டும்.

உண்மையில் இது பலமுறை வாசிக்க வேண்டிய நூல். புரிய கடினமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மிக மிக எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் சாதியமைப்பை புரிந்துக் கொள்வதை விட அதை மற்றவர்களுக்கு புரிய வைப்பது கடினம். அதற்காக இதிலுள்ள முக்கிய கருத்துக்களை ஆழமாக மனதில் பதிக்க பலமுறை வாசிக்க வேண்டும் என்றேன். சாதியை பற்றி புரிந்துக் கொள்ளவும், அதை ஒழிப்பதற்கான வழிகளை யோசிப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படக்கூடிய நூல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *