ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…

1950 களின் நடுவே…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் வந்திருக்கிறார். அவருக்கே அருகே பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி அய்யர். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க, திடீரென மேடையின் பின்புறம், மாடியிலிருந்து பைப்பைப் பிடித்து மளமளவென ஒரு கும்பல் கீழே இறங்குகிறது. என்ன, ஏதென்று பார்வையாளர்களுக்குப் புரிவதற்குள் அக்கூட்டம் துணை வேந்தரை சூழந்துக் கொள்கிறது. அவரால் எங்கும் நகர முடியவில்லை. தயாராக வந்த அக்கூட்டம் துணைவேந்தரை செருப்பால் அடித்தது. பின் நிதானமாக பார்வையாளர்களினிடையே புகுந்து சென்றது. துணைவேந்தர் தன்னிலை இழக்காமல் “நம்ம குழந்தைங்கதான், தெரியாம பண்ணிட்டாங்க” என்று விளக்கமளிக்கிறார்.

அக்கூட்டத்தினர் மொத்தம் 14 பேர். அனைவரும் அங்குப் படிக்கும் மாணவர்கள். துணைவேந்தர் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோருக்கிடையே அதிகம் பேதம் பார்ப்பதை தாங்காது இப்படி ஒன்றினை திட்டமிட்டுச் செய்தார்கள். அதில் கலந்துக் கொள்ளாமல் விலகியவர் தோழர் வீரமணி. அதில் முக்கிய பங்காற்றியவர் ஏ.ஜி.கே எனப்படும் அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரெங்கன். நாகை, தஞ்சை வட்டாரப் பகுதிகளில் இவர் மிகவும் பிரபலம். இப்போதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்பு. எந்தளவு என்றால் எப்படியாவது இவரை அடக்கியாக வேண்டுமென 200க்கும் மேலான வழக்குகள் பதிந்திருந்தார்கள். இவரை மொத்தமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அன்றைய முதல்வர் கருனாநிதி மிகவும் மெனக்கெட்டார் என்கிறார்கள். அப்படி என்னதான் செய்து விட்டார் இவர்?

பெரிதாக ஒன்றுமில்லை. மக்களிடையே சுயமரியாதையை விதைத்தார். அது என்ன பெரிய விசயம்? பெரியார் செய்யாததா? ஆம், பெரியார் தவறிய இடத்தில் அவரது விதையாக விழுந்தவர்தான் ஏ.ஜி.கே. சிறுவயதிலிருந்து தந்தைக்கு விடுதலை இதழை வாசித்துக் காட்டுவதன் மூலம் பெரியாரை தன் சிந்தனைக்கு அறிமுகப்படுத்திய ஏ.ஜி.கே அக்கால அனைத்து இளைஞர்களைப் போலவே, பெரியாரை நேசித்து, திராவிடர் கழகத்தில் இணைகிறார். சுதந்திரம் கிடைக்கிறது என்பது வெறும்பேச்சு, வெள்ளையனுக்குப் பதில் கொள்ளையன் ஆளப்போகிறான், இதிலென்ன சுதந்திரம் இருக்கிறது? அதே நால்வர்ணம்தான் என்று வெட்கமின்றிப் பல்லைக்காட்டும் இந்த நாட்டிற்குச் சுதந்திரம் ஒன்றுதான் கேடா? என்று சுதந்திர தினத்தைக் கருப்பு நாளாகப் பெரியார் அனுசரித்தபடிதான் நாட்டில் எங்கும் நிலைமை இருக்கிறது.

சூத்திரன் சூத்திரனாகவேதான் இருக்க வேண்டும் எனப் பார்ப்பனரும் சாதி இந்துக்களும் நினைக்க, அதை முடிந்த வரை அனைத்து களங்களிலும் அமைப்பாய் பெரியார் எதிர்க்க, அதிலொரு அமைப்புதான் திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம். அதிலொரு இயக்கத்தவராய் செயல்பட்டவர்தான் ஏஜிகே. ஆனால் வரலாறு ஒரு முடிச்சுப் போடுகிறது. அவிழ்க்க முடியாத முடிச்சு. நாட்டிலுள்ள அத்தனை பணப் பழம்பெருச்சாளிகள் முழுக்கக் காங்கிரஸில் இருக்க, பச்சைத் தமிழர் காமராஜர் என்று அவருக்கு, அதாவது காங்கிரசுக்கு ஆதரவளிக்கிறார் பெரியார். மேலே இருப்பவர் ஒழுங்காய் இருந்தால் போதுமா? காங்கிரசின் அனைத்து இடங்களிலும் ஆண்டைகள்தான் மீசையை முறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

களத்தில், விவசாயக் கூலிகளுக்காகவும், பண்ணை அடிமைகளுக்காகவும் போரட வேண்டிய இயக்கத்தவர்களால் பெரியாரின் காங்கிரஸ் சார்பினால் முழுவதுமாகச் செயல்பட முடியவில்லை. நிலைமையைப் பெரியாருக்குத் தெரிவிக்கலாம் என்றால் அவரை நெருங்க முடியவில்லை. வேறுவழியின்றி வெளியேறுகிறார்கள். பெரும்பாலானோர் சென்ற இடம் செங்கொடி இயக்கம், அதாவது மார்க்சிஸ்ட் பொதுவுடைமை அமைப்பு.

ஏஜிகே சிவப்பு சட்டையைப் போட்டுக்கிட்டார். ஆனால் கருப்பு சட்டையைக் கழட்ட மாட்டேங்கறார் என்று விமர்சிக்கும்படி இருந்தன அவரது செயல்பாடுகள். சரி அப்படி என்னதான் அப்போது கூலிகளுக்குப் பிரச்சனை? ஒன்றா இரண்டா பெரும்பட்டியலே போடலாம். இப்படிச் சுருக்கி சொல்லலாம்.

  1. வயலுக்கு நடுவே பண்ணையாட்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும். நேரம் காலமில்லாமல் பண்ணைக்காகக் குடும்பத்தோடு உழைக்க வேண்டும்.
  2. கூலியாக நெல்தான். கொடுப்பதை வீட்டுப் புறக்கடையில் கும்பிடு போட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதையும் எப்போது எங்கே எவ்வளவு தரவேண்டும் என்பதைப் பண்ணையார்கள் பார்த்துச் சொல்வார்கள்
  3. அனைத்திலும் தீட்டு. பெண்களைச் சீரழிப்பதற்கு மட்டும் விதிவிலக்கு

ஆம், அதிகக் கொடுமை நடந்தது. இதை எதிர்த்துக் கூலியில் அரைபடி நெல் உயர்த்திக் கேட்டதற்குத்தான் 44 பேரை குடிசையில் வைத்துக் கீழ்வெண்மணியில் கொளுத்தினார்கள் என்று சொல்வார்கள். அது எப்படி என்றால் காந்தி உண்ணாவிரதம் இருந்தார், வெள்ளையன் சுதந்திரம் வழங்கினான் என்று சொல்வதற்குச் சமம். சுதந்திரத்திற்கு எப்படிப் பெருவரலாறு இருக்கிறதோ அப்படித்தான் இதற்கும். கீழ்வெண்மணி சம்பவம் வெறும் ஓர் அத்தியாயம்தான்.

அரைபடி நெல் என்ன? கேட்டிருந்தால் அரைமூட்டை நெல் கூடச் சேர்த்திக் கொடுத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலேயே அதிகக் கூலி கொடுக்கும் வட்டாரமாக நாகை, திருவாரூர், தஞ்சை வட்டாரங்கள் இருந்தன. கூலி மட்டுமா பிரச்சனை? உண்மையில் சுயமரியாதையே ஆண்டைகளை ஆத்திரமூட்டியது.

முதலில் இயக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை அமைப்பாகத் திரட்டி, ஆரம்பக் காலங்களில் அவர்கள் பின்பற்றும் ஊர்க்கட்டுப்பாடு என்று சொல்லிக் கொள்ளும் சாதிய கட்டுமானத்தை ஏற்றுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களினுள் பெரியாரையும் மார்க்சையும் விதைத்ததுதான் ஏ.ஜி.கே வைக் கண்டு அனைவரும் பதறும்படி செய்தது.

பெரியாரையும் மார்க்சையும் விதைப்பது என்றால் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் சமமாகக் கூலி கொடு என்பது மார்க்ஸியம் என்றால், அவனைச் சக மனிதனாக மதித்துக் கொடு என்பது பெரியாரியம். ஆண்டாண்டு காலமாகத் தங்கள் முன் கூனிக் குறுகி நின்றவர்களை, தங்களிடம் கூலி வாங்குபவர்களை, எந்த முதலாளி சமமாக நடத்துவான்?

ஆனால் இயக்கம், அதாவது கட்சி உழைக்கும் வர்க்கத்தினருடன் இரண்டற கலக்கிறது. இன்று கூட்டம் என்றால் வேலைக்கே போகாமல் வந்து கலந்துக் கொள்வார்கள். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். கூட்டத்தில் ஒரு முடிவு சொல்லிவிட்டால் அதை அப்படியே செய்வார்கள். சொல் வேறு செயல் வேறு என்றெல்லாம் கிடையவே கிடையாது.

உதாரணத்திற்குக் கூலிகளின் வீட்டுப் பெண்களும் பண்ணையார்களுக்குச் சொந்தமான உடைமை போல்தான் அதுவரை நிலைமை இருந்தது. கட்சியில் இனி யாராவது நம் பெண்ணைத் தொட்டால் அவன் கையை வெட்ட வேண்டும் எனத் தீர்மானம் போடுகிறார்கள். பண்ணையார்களுக்கெனப் பெண்களை இழுத்துச் செல்வதற்கென்ற் ஒரு அடியாள் கூட்டம் உண்டு. அப்படி ஒரு கூட்டம் ஒரு பெண்ணைத் தூக்க முயற்சிக்க, அதிலொருவன் கை வெட்டப்படும் காட்சி இருக்கிறது பாருங்கள். சினிமாவில் வைத்தால் மொத்த தியேட்டரும் எழுந்து கத்தும் இடமாக இருக்கும்.

கூலி உயர்வு கேட்டு கொடி பிடித்துப் போராடுவது மட்டும்தான் கட்சியின் வேலையாக இப்போது பார்க்கிறோம். ஆனால் அப்போது நடந்ததெல்லாம் வேறு ரகமாக இருந்திருக்கிறது. ஆள்பலமும், அதிகாரத்துணையும், பரம்பரை பணமும் இருப்பவர்களை உளவியல்ரீதியாக அடிக்கிறார்கள். பல சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. மிகவும் எளிமையான உதாரணமென்றால் பண்ணை வீட்டு பெண்மணிகளும் பெண் வேலையாட்களை அவமரியாதையாகத்தான் நடத்துவார்கள்.

“ஏன்டி இவளே இங்கே வாடி” என்று கூப்பிட்டால் “சொல்லுடி எதுக்குடி கூப்பிட்ட? என்னடி வேணும் உனக்கு?” என்று பதிலளிக்க ஆரம்பித்தார்கள். நம்ப முடிகிறதா? கட்சி சொன்னால் செய்வார்கள், அவ்வளவுதான். சுயமரியாதைக்கான போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியதாக இருந்திருக்கிறது. அதிலும் ஆணாதிக்கம் மிகுந்த பண்ணைகளும், அவர்களது அடியாட்களும் திரும்பி அந்த ஊர்ப்பக்கமே வராமல் சொத்துக்களை மொத்தமாக விற்று விட்டு ஓடுமளவிற்கெல்லாம் நிகழ்ந்திருக்கிறது.

இது வெறும் பண்ணையார்களுக்கு மட்டுமல்ல. யாரெல்லாம் பிறப்பால் ஒடுக்க நினைக்கிறார்களோ அத்தனை பேருக்கும் எதிராக நடக்க ஆரம்பிக்கிறது. “யார் நீ? இந்த சாதிதானே? நீ செஞ்சுருப்படா” என்று சாதி பார்த்து தீர்ப்பெழுதும் நீதிபதி ஒருவருக்குக் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு தண்டனை. ப்பா. 2021ல் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விசயமது.

துப்பறவு பணியாற்றும் பெண்களை வைத்துப் போராட்டத்தை நடத்துவதெல்லாம் கிரிமினல் மூளையில் உதிக்கும் சிந்தனை எனலாம். என்ன மாதிரியான போராட்டமென்று சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடுமெனச் சொல்லாமல் மறைக்கிறேன்.

ஒருபக்கம் உழைக்கும் வர்க்கம் அமைப்பாய் திரள, மறுபக்கம் ஆண்டைகள் அமைப்பாய்த் திரள்கிறார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கம். அதன் துவக்கம் முதல் இறுதிவரை அத்தனை செயல்பாடுகளும் தெளிவாய் தரப்பட்டுள்ளன. அவர்களின் ஒவ்வொரு அடிக்கும் எதிரடி, அதுவும் செருப்படியாய் விழ தாங்க முடியாத ஆத்திரம் ஆண்டைகளுக்கு. அதுதான் அவர்களை ஊரையே எரிக்க வைத்தது.

மார்க்ஸ் பொதுவுடைமையை விதைத்தது ஜெர்மனியில். ஆனால் முளைத்தது இரஷ்யாவிலும் சீனாவிலும். அதே போல் பெரியார் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் ஓரிடத்தில் விதைக்க, அது செங்கொடி இயக்கத்தில் விருட்சமாய் வேர்விட்டது. வயல்வெளிகளிலும் களத்துமேடுகளிலும் பெரியாரும் மார்க்சும் தோளோடு தோளாக நடமாடத் துவங்கிய பின் அந்த நிலங்களின் வரலாறு மாறத் துவங்குகிறது.

கீழ்வெண்மணி சம்பவம் குறித்து நூல் எழுதுவதற்காகப் பலரை பேட்டியெடுக்கப் பசு.கவுதமன் முயல்கையில் அவரிடம் அகப்பட்டிருக்கிறார் ஏஜிகே என்னும் முன்னாள் தூக்குத் தண்டனைக் கைதி. ஆம், முக்கொலை வழக்கு ஒன்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டு, பல ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டு வெளியானவர் மீண்டும் திராவிடர் கழகத்திற்கே திரும்புகிறார்.

தமிழக வரலாற்றில் கீழ்வெண்மணி என்பது மிக மிக முக்கியமான சம்பவம். அது ஏன் நடந்தது என்பது மட்டும் விவாதிக்க வேண்டியது என்பதில்லை. எங்கே துவங்கியது? அதில் யார்யாருடைய பங்களிப்புகள் உள்ளன என்பதும் முக்கியம். 44 பேரை எரித்த கோபாலகிருஷ்ண நாயுடு என்னவானார் என்பது தெரிந்தோருக்கு, அவர் கொலை வழக்கில் சிக்கியவர்கள் யார்? கொன்றவர்கள் யார்? என்பதெல்லாம் தெரியாது.

இன்னும் சொல்லப்போனால் பல வாட்சப் பல்கலைக்கழக அறிவாளிகள் கோபால கிருஷ்ண நாயுடுவை பெரியார் ஆதரித்தார் என்றும் பல வருடங்களாகப் பரப்பி வருகிறார்கள். களத்தில் செயல்பட்டவர்கள் யாரை விமர்சித்தாலும் பெரியாரை விமர்சிக்கவில்லை. ஏஜிகே கூட காமராஜர், கக்கன், அண்ணா, கலைஞர், பொதுவுடைமை தலைவர்கள் என அனைவரையும் கேள்வியெழுப்புகிறார். அவர் முழுமையாக நம்பியது பெரியாரையும் மார்க்சையும் மட்டும்தான்.

இருவரது சித்தாந்தங்களையும் பிரித்துக் கூட அவர் பார்க்கவில்லை. செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம் என்கிறார். அதைப் புரிந்து கொள்ளத் தனி விளக்கமேதும் தேவைப்படுவதில்லை. ஏஜிகேவின் வாழ்க்கை அனுபவங்களே போதுமானதாக இருக்கிறது.

இந்த புத்தகத்திலிருக்கும் சம்பவங்களைக் கொண்டு பல திரைப்படங்களை எடுக்கலாம். போராட்ட முறைகளைப் பல காட்சிகளில் பயன்படுத்தலாம். ஏனென்றால் இவையெல்லாம் எங்கேயும் காட்டப்படாதவை. இப்படியெல்லாம் நடந்தது என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். ஒவ்வொன்றும் அப்படிப்பட்டவையாக இருக்கின்றன.

கீழ்வெண்மணி தொடர்பான ஆய்வு நூலுக்கு, முந்தைய கள நூலாகத்தான் இது அமைந்திருக்கிறது என்கிறார் எழுத்தாளர் பசு.கவுதமன். இதன் தொடர்ச்சியான பச்சைத் தீ (வெண்மணி பதிவுகள்) வந்ததா என்று தெரியவில்லை. கிடைத்தால் அதையும் வாசிக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கக் கூடிய நூற்பட்டியலில் இப்புத்தகமும் இடம்பெறுகிறது.

திமுகவை, கலைஞர் கருனாநிதியை நேரடியாக குற்றம் சாட்டும் இந்த நூலினை, திராவிட எதிர்ப்பாளர்கள் வாசித்து மகிழலாம் என்றாலும் குறுக்கே கைத்தடியுடன் பெரியார் நிற்பார் என்று முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *