பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

மானுடம் என்பதன் அர்த்தம் என்ன? மற்ற உயிர்களிலிருந்து நாம் எதில் வேறுபடுகிறோம்? அன்பு, சக உயிர் மீதான நேசம், சமூகமாக வாழ்தல் போன்ற பதில்கள் வரலாம். அத்தனையும் தவறு. மேற்படி விசயங்களில் நம்மைக் காட்டிலும் சிறப்பாக வாழும் உயிர்கள் உண்டு. மனிதனின் அடையாளம் தீராப்பசிதான். பசி என்றால் வெறும் வயிற்றுப்பசி மட்டுமல்ல. அனைத்து வித பசிகளும்தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித பசி. அறிவுப்பசியோடு கடைசி வரை தொடர்ந்து பயில்வோரையும் பார்த்திருப்போம். காமப்பசியோடு கடைசிவரை திருப்தியுறாமல் அலைவோரையும் கண்டிருப்போம். அதிகாரப்பசியை பற்றி சொல்லவே வேண்டாம். குடும்பத்திற்குள்ளேயே அதை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால் குடும்பத்தில்தான் அது துவங்குகிறது.

அப்படியான வயிற்றுப்பசி, அதிகாரப்பசி, காமப்பசி, ஆன்மப்பசி பற்றி பேசுகிறது இந்த பசித்த மானுடம் என்னும் நூல். பல சிறுகதைகள் எழுதி புகழ்பெற்ற கரிச்சான்குஞ்சு எழுதிய ஒரே நாவல். வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல. இப்போது வாசித்தாலும் அதன் சாரம் பெரும் விவாதத்தை கிளப்பும். அதில் முக்கியமானது ஓரினப்புணர்ச்சி. அதில் எந்த தவறுமில்லை என்ற விழிப்புணர்வு இப்போது இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் அவ்வாறு இருந்தால் கூட ஏற்றுக் கொள்ளும் மனப்பக்கவம் இருப்பவர்களிடம் அவர்கள் முன்னோர்களும் அப்படித்தான் என்று சொன்னால் ஏற்பார்களா என்பதுதான் பிரச்சனை.

உதாரணத்திற்கு வந்தார்கள் வென்றார்கள் என்றொரு நூல். கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. அதில் பல இஸ்லாமிய சுல்தான்கள், அவர்களது அடிமைகளுடன் அவ்வாறு இருந்ததாக சொல்லப்பட்டிருக்கும். அதில் முக்கால்வாசிக்கும் மேல் ஆதாரமற்றவை. உதாரணத்திற்கு மாலிக் கபூரை ஆண்மையற்ற அலியென குறிப்பிட்டிருப்பார். அது முழுக்க வன்மத்தின் வெளிப்பாடுதான். இல்லை என மறுக்க முடியும். ஆனால் அப்படி மறுப்பதே அது ஒரு அவமானகரமானது என்பதை சார்ந்தோரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகி விடும். அது அப்படியே இருக்கட்டும். மாறாக தமிழ் புகழும் வரலாற்று நாயகர்கள் காலத்தில் இங்கேயும் அவ்வாறு ஓரினச்சேர்க்கை இருந்தது என்று ஏன் யாருமே எழுதவில்லை? அது சரி, தவறு என்ற விவாதம் இரண்டாவது, முதலில் இங்கு நம் முன்னோரிடையேயும் அது இருந்திருக்கவே வாய்ப்பில்லை என்பதுதானே இங்கு அனைவரது நிலைப்பாடாக இருக்கிறது? அது எப்படி சாத்தியம்?

அந்த விசயத்தை கட்டுடைப்பதால்தான் பசித்த மானுடம் என்றால் அனைவரும் சில கணம் உறைகிறார்கள். சுதந்திரத்திற்கு முன்பு 1920-40கள்தான் இதன் கதைக்களம். தோப்பூர் என்ற தஞ்சை வட்டாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வாழும் இரண்டு நபர்களை சுற்றிய சம்பவங்களின், அவர்களது வாழ்வின் சாரம்சத்தைக் கொண்டே மானுடத்தின் பசி விளக்கப்படுகிறது.

கனேசன் – பெற்றோரை இழந்து, சத்திரத்தில் எச்சில் இலை எடுப்பவனாக இருந்து, பின் வாத்தியார் ஒருவரால் தோப்பூருக்கு தத்துப் பிள்ளையாக வருகிறான். ஊரின் செல்லப்பிள்ளையாக மாறுகிறான்.

கிட்டா – அதே தோப்பூரை சேர்ந்தவன். அப்பா இல்லாத, அம்மாவுக்கும் அடங்காதவன். ஊராரால் தூற்றப்படுபவன். அவனுக்கு அவனை அனைவரும் உதாசீனப்படுத்துவதும், கனேசனைக் கொண்டாடுவதும் தாளாமல், எங்காவது சென்று, எதிலாவது முட்டி, மோதி, பெரிதாக வளரும் எண்ணத்துடன் ஊரை விட்டு போகிறான்.

இப்படி பிரியும் இருவரது வாழ்க்கையும் மீண்டும் ஒரு புள்ளியில் சந்திப்பதற்குள் அவர்கள் சந்திக்கும் மனிதர்களும், அவர்களுக்கு கிட்டும் அனுபவங்களும், அவர்கள் அடையும் மாற்றமும்தான் நாவல்.

அனைவராலும் உதாசீனப்படுத்தப் படுபவனாக இருக்கும் நிலையிலிருந்து மாற விரும்பும் கிட்டா, அதற்காக கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறான். அதற்காக அனைவரது குடியையும் கெடுக்கிறான் என்று சொல்ல முடியாது. உண்மையில் சொல்லப் போனால் அவன் உள்ளம் தூய்மையாகத்தான் இருக்கிறது. வெண்குஷ்டம் வந்த தன் முதலாளியை, அவரது குடும்பமே ஒதுக்கி தள்ளிய நிலையிலும், அவரை கண்ணீரோடு காசிக்கு அனுப்பும் காலம் வரை அவன்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறான்.

அதே சமயம், தனக்கு கிடைக்கும் வசதியான வாழ்விற்காக, ஊர் கொஞ்சும் செல்லப்பிள்ளையாக இருந்த கனேசன், ரவுத்துக்கு ஆசை நாயகனாக செல்கிறான். இது சரியான வார்த்தை அல்ல. ஆங்கிலத்தில் இதற்கு பல வார்த்தைகள் இருந்தும் தமிழில் இல்லாமல் இருக்கிறது. பதின்மத்தில் இருக்கும் சிறுவர்களை, ஓரினப்புணர்ச்சியாளர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பதைக் கூட விரிவாக எழுதியிருக்கிறார். வசதியான வாழ்வுதான், ஆனால் சுதந்திரம் இல்லை. எங்கு சென்றாலும் யாருக்கும் முகத்தை காட்டாமல் முக்காடிட்டிருக்கும் வாழ்வு.

செல்வந்தரான ரவுத்திடமிருந்து விடுதலை கிடைக்கிறது. அடுத்து ஒரு ஜவுளிக்கடை முதலாளி. ஆனால் இப்படியெல்லாம் இருக்கும் கனேசன், ஓர் எதிர்பாலின விரும்பி. ஒருவழியாக ஆண்களிடமிருந்து தப்பித்தால் சுந்தரி, பெண்மருத்துவர், இறுதியாக ஒரு குருட்டு பிச்சைக்காரி. எல்லாம் கடந்து ஞானம் பெற்று ஊர் வணங்கும் மகானாகிறான்.

கிட்டாவின் வாழ்வு எதிர்ப்பதம். கனேசனை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால், கிட்டா எல்லோரையும் பயன்படுத்திக் கொள்கிறான், எல்லா விதத்திலும்தான். ஒருக் கட்டத்தில் அவனுக்கு கீழிருந்த அனைவரும் அவனுக்கு எதிராக திரும்ப, அத்தனை ஆண்டுகள் கட்டி வைத்திருந்த அஸ்தஸ்தும் கௌரவமும் இடிந்து விழுகிறது. பெற்றப் பையன் கூட மதிப்பதில்லை. பல இலட்சக்கணக்கில் சொத்து இருந்தும் அமைதி இல்லை. நிம்மதியில்லை.

இந்த நேரத்தில்தான் கனேசனும் கிட்டாவும் சந்திக்கிறார்கள். அதுதான் புதினத்தின் நிறைவுப்பகுதி.

ஆனால் மனதிற்குள் அது நிறைவடையாமலேயே தொடரும். இதனை வாசித்து விட்டு, இது பிடித்திருக்கிறதா, இல்லையா என்ற முடிவுக்கே வர முடியாது. இது என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்துக் கொள்ளவே கொஞ்ச காலமாகும்.

நாவல் நடுவே பேசும் பல விசயங்கள் படு சுவாரசியமானவை. உதாரணத்திற்கு தீவிர அன்பு காட்டும் பெண்கள் சட்டென உறவை முறிப்பார்கள். அவர்களால் எப்படி அது முடிகிறது என்பது நூற்றாண்டு வினா!. கிட்டாவால் உண்மையில் அதைத்தான் தாங்க முடியாது. அதற்கான பதில்தான் கனேசனிடம் கிடைக்கும்.

எழுத்து நடை அட்டகாசம். இல்லையென்றால் துவக்கத்தில் ஒரு பெருவியாதிக்காரனின் அன்றாடங்களை படித்து கடக்கவே முடியாது. என்ன ஆனாலும் மனதிற்கு ஒரு அருவெறுப்பு வந்து விடும். ஆனால் கீழே வைக்க முடியாத நடை. யார் இந்த கனேசன்? எப்படி இவன் இப்படி ஆனான்? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் சுவாரசியத்திலேயே அக்கட்டங்களை கடந்து விடுவோம்.

இந்த நூலை வாசிக்க சொல்லி புதிதாக நான் பரிந்துரைக்க தேவையில்லை. இது ஏற்கனவே தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இருக்கும் ஒன்றுதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *