Bengal Nights – Mircea Eliade

மைத்ரேயிதேவி என்றொரு வங்கப் பெண், தாகூரின் சீடர், கவிஞர், சமூக சேவகி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு என வாழ்பவர். எல்லாம் சுமூகமாக செல்லும் அவர் வாழ்வில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. தனது ஐரோப்பிய பயணத்தின்போது, ருமேனியர்கள் தன் பெயரைக் கேட்டதும் நன்கறிந்தவர்கள் போல முக உணர்வை வெளிப்படுத்துவது ஏன் என்று அவருக்கு புரியவில்லை. பின் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் ருமேனிய நண்பர் ஒருவர் அதற்கான காரணத்தை விளங்க வைக்கிறார்.

1920-30 களில் மைத்ரேயியின் வீட்டில் தங்கிய ஒரு ருமேனிய இந்தியவியல் அறிஞரான மிர்சா என்பவருடன் தான் கொண்டிருந்த எல்லை மீறாத காதல், 1933ல் வெளியான அவரது நாவல் ஒன்றில், தன் சொந்தப் பெயரிலேயே மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்டு, வெளியாகி, பெரும் வெற்றியை பெற்ற விசயம் அவருக்கு தெரிய வரும் போது ஆண்டு 1972. மனமுடைந்து போகிறார்.

1973ல் சிகாகோ பல்கலைகழகத்திற்கு செல்கையில், அங்கு பணியாற்றி வந்த மிர்சாவை சந்திக்கிறார். தன்னை நிமிர்ந்து பார்க்க முடியாத குற்ற உணர்விலிருக்கும் மிர்சாவிடம் தான் உயிருடன் இருக்கும்வரை அந்த நூலை ஆங்கிலத்தில் வெளியிடக்கூடாது என்றும், மீறினால் சட்டப்பூர்வமாக வழக்கு தொடுப்பேன் என்றும் மிரட்டி வருகிறார். ஆனாலும் மனம் ஆறவில்லை. அவர் தரப்பை “நா ஹன்யதே” என்ற வங்க நாவலாக வெளியிடுகிறார். பெரும் வரவேற்பு. 1976 ல் அதற்கு சாகித்திய விருது கிடைக்கிறது.

இரு நபர்களுக்கு இடையிலான காதலை, இரு நபர்களின் பார்வையில், இன்னும் சொல்லப்போனால் அவர்களது ஆழ்மன வெளிப்பாடுகளை, இருவரது எழுத்திலும் படிக்கும் வண்ணம் இரண்டும் இருந்தன. அந்த இரண்டு நூல்களையும் ஆங்கிலத்தில் 1994 ல் சிகாக்கோ பல்கலைக்கழகம் வெளியிட்டது. இது குறித்த தகவல்கள் எனக்கு ஜெயமோகன் அவர்களின் தளத்தில் எழுதப்பட்ட பதிவொன்றின் மூலம் கிடைத்தது. இரண்டு புத்தகங்களையும் தேடிப் பிடித்து வாங்கினேன். அதில் மிர்சாவினால் எழுதப்பட்டதுதான் இந்த பெங்கால் நைட்ஸ்.

ஆலன் என்ற பிரெஞ்சு பொறியாளன், தன் வேலை நிமித்தமாக கல்கத்தாவில் இருக்கிறான். அங்கு அவன் வாழ்வு, நல்ல சம்பளமும், குடியும் கூத்துமாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து அவனது முதலாளி நரேந்திர சென்னின் குடும்பம் அவனை மிகவும் பாசமாக நடத்துகிறது. அவனுக்கு உடல் நலமில்லாத பொழுது, தங்கள் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்கிறது.

அவர்களின் மகள் மைத்ரேயி, 16 வயது பெண், தாகூரின் சிஷ்யை, உண்மையை சொல்வதென்றால் மனதிற்குள் ரகசியமாக அவரை காதலிப்பவள், கவிதைகளிலும் தத்துவங்களிலும் மூழ்கியிருப்பவள். ஆலனுக்கு விருப்பமே இல்லையென்றாலும் மைத்ரேயியுடன் பொழுதை கழிக்க வேண்டி வருகிறது.

முதலில் பெரிதாக ஈர்க்காத மைத்ரேயியின் எழில், கொஞ்சம் கொஞ்சமாக ஆலனை வசீகரிக்கிறது. அவளது கள்ளங்கபடமற்ற உள்ளமும்தான். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். அவள் அதை வெறும் நட்பு என்று சொல்ல, அவன் எடுத்ததுமே தீண்ட தொடங்குகிறான். தேகங்களுக்கிடையிலான சுவர் இடிபட, வங்காள இரவுகள் அவர்களுக்கானதாகின்றன.

அவன் அறைக்கு, நடு நிசியில் வந்து செல்வதை மைத்ரேயி வழக்கமாக கொள்கிறாள். நாளுக்கு நாள் உடலாலும் உள்ளத்தாலும் மிகவு நெருங்குகிறார்கள். அவளிடம் யார் பேசினாலும் பொறாமை கொள்ளும் அளவிற்கு ஆலன் காதல்வயப்படுகிறான்.

பிரியாத உறவுகளை யாரும் காவியமாக்குவதில்லை. ஆலன் – மைத்ரேயிக்கும் பிரிவு வருகிறது. இது ஆலன் பார்வையில் சொல்லப்படும் புதினம் என்பதால் அவனது துயரும் துக்கமும் மட்டும்தான் நமக்கு அறிய வருகிறது. அவன் அந்த வீட்டை விட்டு வெளியேறும் கணத்திலிருந்து கடைசி பக்கம் வரை மனம் கனமாகவே இருக்கிறது.

அவ்வளவுதான், இதுதான் கடைசி என்று யாராவது முன்பே சொல்லவா செய்கிறார்கள்? ஒவ்வொரு நினைவாக கொல்லுகிறது. வேலை செய்யுமிடத்திலும் பிரச்சனை. கையிலிருந்த பணமும் காலி. அனைத்தையும் தொலைத்து விட்டு, எதையோ தேடி அலையும் ஆலன், இறுதியாக சிங்கப்பூரில் மைத்ரேயியின் உறவினன் ஒருவனை சந்தித்து, அவளுக்கு நேர்ந்ததை அறிகிறான். கொடுமை.

ஹிமாலயத்தில் அமைதிக்காக தங்கியிருக்கும் ஆலனிடம், அங்கு வந்து செல்லும் பெண்ணொருத்தி, அவன் காதல் கதையை கேட்டு, அழுதுக் கொண்டே கட்டயணைப்பாள். ஏன் என்று கேட்டதற்கு சொல்லுவாள், “உன் கதையை கேட்கையில், உங்களை தவிர மற்ற அனைவரும் அன்பு காட்ட ஆளில்லாத அனாதைகளாக தோன்றுகிறது. எனக்கும் அப்படி நேசிக்க யாருமில்லை என்று துக்கத்தில் அழுதேன்.” என்பாள். அப்படி இருக்கும், அவர்களது காதலும் சோகமும்.

இக்கதை பொய்யாகவே இருந்தாலும் வெறும் எழுத்தாக கடக்க முடியவில்லை. அவன் ஆழ்மன ஆசைகள்தானே எழுத்தாக வந்திருக்கும். இப்படி எழுதியதன் மூலம்தானே அவளை கடந்ததாக மிர்சாவும் சொல்லியிருக்கிறார்.

அடுத்து மைத்ரேயிதேவியின் புத்தகம் வாசிக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *