1801: முதல் இந்திய சுதந்திரப் போர் டாக்டர்.மு.ராஜேந்திரன்

சமீபமாக ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. குடியரசு தின விழாவில் தமிழ் நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று. அது குறித்து முதலமைச்சர் ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுகிறார். தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதியில்லை.

ஏன் இதை வாசிப்பு தொடர்பான பதிவில் குறிப்பிடுகிறேன் என்றால் நான் வாசித்ததே இதனை குறித்துதான். தமிழக அரசு தனது அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி ஆகியோரை தமிழகத்தின் அடையாளமாக காட்ட, அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் வாசித்த இந்த நூல் வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களின் வாழ்வைத்தான் சொல்கிறது.

No photo description available.

காலம்காலமாக பள்ளி பாடத்திலும் திரைப்படங்களின் வாயிலாகவும் வரலாற்றை நுனிப்புல் மேய்கிறோம். அதில் பிரச்சனை என்னவென்றால் அத்தோடு அனைத்தையும் கற்றறிந்து விட்டோம் என்று திருப்தியடைவதுதான். கல்லாததில் காளையார் கோவில் போர் அளவும் அடங்கும்.

எதற்கு கேட்கிறாய் வரி? ஏன் கேட்கிறாய் கிஸ்தி? என்று முழக்கமிடும் வீரபாண்டிய கட்டபொம்மன் புனைவானவர். உண்மையான கட்டபொம்மன் முறையாக திரை கட்டுபவர். திமிர் பிடித்த கலெக்டரை எதிர்ப்பதில் துவங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, போரில் தோற்று, களப்பூர் காடுகளில் மறைந்து வாழ்கையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தாரால் கைது செய்யப்பட்டு கம்பெனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு 1799 அக்டோபர் 16ல் தூக்கிலிடப்படுகிறார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தம்பிகளான சிவத்தையாவும் குமாரசுவாமி aka ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைபட்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் அனைத்து போர்களிலும் வெற்றி பெறுவது ஒரே ஒரு காரணத்தினால்தான். அவர்கள் ஒரு நேரத்தில் ஒரு எதிரியுடன் தான் மோதுவார்கள். அவனை முடித்துவிட்டுத்தான் அடுத்த எதிரி.

இந்த தந்திரத்தை சரியாக யூகித்துக் கொண்ட சிவகங்கை தேசத்து பிரதானி சின்ன மருது, அனைவரும் ஒன்றினைந்து ஒரே சமயத்தில் கம்பெனிக்காரனை எதிர்க்க வேண்டும் என திட்டமிடுகிறார். அனைவரும் என்றால் அக்கம் பக்கத்து பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மராட்டிய பூனேவை சேர்ந்த துந்தாஜிவாக் முதற்கொண்டு கன்னியாகுமரி முனையில் இருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்து வேலுத்தம்பி வரை அனைவரையும் ஒருங்கிணைக்கிறார். அத்தனை பேரிடமும் அவருக்கு இருந்த நற்பெயரும் செல்வாக்கும் ஒருங்கிணைப்பை வெற்றி பெறசெய்தாலும், திட்டத்தை செயல்படுத்துவதில் ஏகப்பட்ட தடைக்கற்கள்.

ஆங்கிலேயனின் பலம் ஒன்றுதான். அவன் யாரையும் முழுதாக நம்பவே மாட்டான். நீங்கள் அவனுக்காக உயிரையே கொடுத்தாலும், ஆவியாக வந்து பின்னாளில் தொல்லை கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்று சந்தேகப்படுவான். அப்படிப்பட்ட ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் வலிமையான மருது சகோதரர்களின் அமைதியை சந்தேகிக்காமலா இருப்பார்கள். அப்போதுதான் மைசூர் போர் திப்பு சுல்தான் மரணத்துடன் முடிந்திருக்கிறது. அதே போல் கட்டபொம்மனின் மரணம். இதெல்லாம் கம்பெனிக்கு அதிகாரத்தை அதிகரிக்க செய்திருந்தாலும் எச்சரிக்கவும் செய்கிறது.

அந்த எச்சரிக்கை, சின்ன மருதுவின் திட்டத்தின்படி, கோயமுத்தூர் சிறையிலிருக்கும் புரட்சி வீரர்களை ஓடா நிலை தீரன் சின்னமலை தலைமையில் விடுவிக்க எடுத்த முயற்சி ஆங்கிலேயரின் அதிரடி கைதுகளால் தடைபட, அடுத்து திட்டமிட்டபடி பாளையங்கோட்டை சிறை விடுவிப்பு வெற்றிகரமாக நடக்கிறது.

ஒன்று தோல்வி, மற்றொன்று வெற்றி என்று ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆனால் அதற்கான ஒவ்வொரு முயற்சியையும் மிக விரிவாக அழகாக சொல்லியிருக்கிறார். யாரை பிடிக்க வேண்டும், என்னென்ன கதை சொல்லி மனதை கரைக்க வேண்டும், என்று , எப்படி என்று தெளிவாக திட்டமிட்டு தப்பிக்க வைப்பதோடு யார் காரணமென்பது எப்போதும் தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

பாளையங்கோட்டை சிறையிலிருந்து வெளியேரும் சிவத்தையாவும் ஊமைத்துறையும் தங்களது இடிக்கப்பட்ட கோட்டைக்கு செல்கிறார்கள். 3 நாட்களில் கோட்டையை திருப்பி எழுப்புவதை படிக்கையில் புல்லரித்தது. அதுவும் ஊமைத்துரைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பார்க்கையில் பாகுபலி என்று அனைவரும் சொல்வது போல் இருக்கும். இராஜவிசுவாசத்தை தாண்டிய பாசம்.

ராமநாதபுர அரசிற்கும் சிவகங்கைக்குமான தொடர்பு, 10 வயதில் சிறையிலடைக்கப்பட்டு 20 ல் வெளியே வந்து ராஜாவான சேதுபதி முத்துராமலிங்கம், சிவகங்கை சீமையின் வரலாறு, அதன் ஆட்சி பொறுப்பிற்கு நடந்த போட்டிகள், ஆங்கிலேயரின் சூழ்ச்சி, வேலு நாச்சியாரின் சாகசம் என பிளாஸ்பேக் பகுதிகள் மட்டுமே அத்தனை விறுவிறுப்பை தரக்கூடியவை.

உண்மையில் தேர்வுக்காக அனைத்து போர்கள் குறித்தும் படித்திருந்தாலும் இதில் உறவு சிக்கல்கள் எந்தளவு விளையாடி இருக்கிறது, குறிப்பாக ஒரு பெண்ணிற்கு போட்டியிட்ட மூவர், அதன் காரணமாக உண்டான பகை எனும் புகை மூட்டத்தில் உள்ளே அ ந் நியனான ஆங்கிலேயன் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்ததை கவனிக்காமல் விட்டு விட்டார்கள்.

அனைவரும் ஒன்று பட்டு எதிர்க்க வேண்டும் என்று தோன்றும் போதே சேதுபதி, ரிபெல் சேதுபதியாகி சிறையிலடைக்கபடுகிறார். பாளையங்கோட்டை சிறை விடுவிப்பிற்கு பிறகு அவரை திருச்சியில் இருந்து மெட்ராசுக்கு மாற்றுகிறார்கள். இதில் சேதுபதி இருக்கும் ஊரில்தால் குடியிருப்போம் என்று 90 குடும்பங்களும் பின் தொடர்வதெல்லாம் என்ன மாதிரியான விசுவாசம்?

சிவகங்கை அரசுரிமையைத்தான் ஆங்கிலேயர்கள் கேள்வியாய் முன் வைத்து யுத்தத்தை நடத்த பார்த்தார்கள். ஆனால் நடக்க போகும் எதற்காக என்பதை தெளிவாக ஒரு அறிக்கை மூலம் அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார் சின்ன மருது. உண்மையில் காந்தி வந்த பிறகுதான் வெகுஜன மக்களை அரசியல்படுத்த துவங்கியிருக்கிறார்க என்று நினைத்து கொண்டிருந்தேன். உண்மையில் 1801 லேயே மக்கள் அனைவருக்கும் ஏகாதிபத்தியும் தெளிவற புரிய வேண்டுமென சின்ன மருது விரும்பி அதற்கான முயற்சியை துவக்கியிருக்கிறார்.

ரிபெல் சேதுபதி ஓரிடத்தில் சொல்வது போல “சின்ன பாண்டியர் சிவகங்கைக்காக மட்டுமெல்லாம் யோசிச்சு ரொம்ப காலமாச்சு. அவர் எல்லாருக்குமா யோசிக்கிறார்” மிகப்பெரும் தலைவனாக வரலாற்றில் நிலை நின்றிருக்க வேண்டியவர். அவர் திட்டப்படி எல்லாம் நடந்திருந்தால் அப்போதே தென்னிந்தியாவிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியை மொத்தமாக விரட்டியடித்திருப்பார்.

இத்தனைக்கும் மருது சகோதரர்களுக்கு வேறு வாய்ப்பெல்லாம் இல்லாமலில்லை. கடைசி நிமிடம் வரை கம்பெனியின் பேச்சை கேட்டால் ராஜபோக வாழ்க்கை ஓய்வூதியத்துடன் கிடைக்கும் என்று பேரம் பேசப்பட்டுக் கொண்டேதான் வந்தது. அனைத்தையும் வேண்டாமென ஒதுக்கு சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒருங்கிணைத்து அவர் யுத்தத்தை துவங்க, ஆங்கிலேயனும் அனைத்தையும் க்டந்து பேராசையை கொண்டு துரோகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்தான்.

புத்தகத்தின் முகப்பு படத்தில் காட்டப்படுவது போலத்தான். அத்தனை துரோகங்கள். அயலான் அல்ல, எல்லாம் நம் தமிழர்களேதான்.

அதிலும் முக்குலத்தோர் என்று சொல்லப்படுவோரிடையே மிகவும் நேக்காக சாதிச்சண்டையை தூண்டி குளிர்காய்ந்திருக்கிறான் வெள்ளையன்.

அதிலும் புதுக்கோட்டை, திருவிதாங்கூர் சமஸ்தாங்கங்களது கம்பெனி விசுவாசம் இருக்கிறதே, யப்பா யப்பா யப்பா, உள்ளூர் ராஜ்ஜியங்களிலிருந்து யாராவது கம்பெனியை எதிர்த்தால் ஆங்கிலேயனுக்கு முந்திக் கொண்டு இவர்கள் களத்தில் குதிக்கிறார்கள்.

இப்படிப்பட்டோரினை துணையாக கொண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படை புரட்சியாளர்களை வஞ்சத்தாலும் துரோகத்தாலும் வீழ்த்துகிறது. அதையெல்லாம் விரிவாக எப்படி என்று படிக்கையில்தான் நமக்கு முழுவதுமாக விளங்குகிறது.

தரவுகளை நமக்கு புனைவாய் கொடுக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் ஆசிரியர். உண்மையில் பல தகவல்கள் புதிதாய் இருக்கவும் அதிகப்படியான தகவல்கள் நம்மை உறுத்தவதில்லை. மீண்டும் மீண்டும் அரசுரிமை குறித்த கதைகள் வெவ்வேறு பாத்திரங்களால் பேசப்பட்டாலும் அலுப்பதில்லை. உண்மையில் அப்போதுதான் நமக்கு தெளிவாக புரிகிறது.

ஆசிரியரின் அனைத்து படைப்புகளுமே சுதந்திர போராட்ட வரலாறு சார்ந்து, புதிய கோணத்தில், அனைவரும் அறியாதவற்றை சொல்வதாய் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் இவரை கொண்டாடி அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

கிண்டில் அன்லிமிட்டட் பிளானில் கிடைக்கிறது. நான் அதில்தான் வாசித்தேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *